×

திருவள்ளூர், காக்களூரில் பறிமுதல் வாகனங்களில் தேங்கும் மழை நீரால் கொசு: டெங்கு பீதியில் மக்கள்

திருவள்ளூர், அக். 30: திருவள்ளூர் நகர், காக்களூர் பழைய நீதிமன்றம் ஆகிய பகுதிகளில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தியுள்ள வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை கடத்தும் வாகனங்களை, மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அதிகாரிகள் ஏலம் விடுவதில்லை. இதனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் ஆண்டுக்கணக்கில் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா, விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், காக்களூர் பழைய நீதிமன்ற வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கு நடப்பதால் உரிமையாளர்கள் வாகனங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். போலீசாரும் அவற்றை பராமரிப்பதில்லை. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கும் வாகனங்கள் பயன்பாடின்றி துரு பிடித்து வீணாகி வருகின்றன. மழைபெய்யும்போது இந்த பறிமுதல் வாகனங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கும் நீரில் கொசுப்புழுக்கள் ஏராளமாக வளர்ந்து, கொசுக்கள் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களை பகலிலும் கடிக்கிறது.

இதன்மூலம் காக்களூர் மற்றும் திருவள்ளூர் நகர பொதுமக்களுக்கு அதிகளவில் டெங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி பூங்கா, விளையாட்டு மைதானம், காக்களூர் பழைய நீதிமன்றம் ஆகிய பகுதிகளில், புட் செல் போலீசாரால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை உடனடியாக அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Tiruvallur ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...