×

திருத்தணி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் பயங்கர மோதல் 3 பேர் பரிதாப பலி; ஒருவர் சீரியஸ்

சென்னை, அக்.30: திருத்தணி அருகே நேற்று முன்தினம் இரவு 2 பைக்குகள்  நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருத்தணி  போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை-திருப்பதி தேசிய  நெடுஞ்சாலையில் திருத்தணி அருகே முருகம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியை  சேர்ந்த ஒரு நபருக்கு நேற்று முன்தினம் இரவு திருத்தணி-சித்தூர் சாலையில்  உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,  பங்கேற்பதற்காக, முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த கன்னிகான் என்பவரது மகன்  கதிர்வேல் (22), அதே கிராமத்தில் வசிக்கும் அவரது நண்பரான அஜீத்குமார் (22)  ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை திருத்தணியில் நடைபெற்ற வரவேற்பு  நிகழ்ச்சிக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் இருவரும் அன்று  இரவு  பைக்கில் மீண்டும் முருகம்பட்டு கிராமத்துக்கு திரும்பி  கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பொதட்டூர்பேட்டை அருகே பாண்டரவேடு கிராமத்தை  சேர்ந்த பாஸ்கர் (40), அதே பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (24) ஆகிய  இருவரும் திருத்தணி நோக்கி எதிர்புறமாக பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்,  முருகம்பட்டு கிராமம் அருகே தமிழ்நாடு ஓட்டல் எதிரே இரு பைக்குகளும்  நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இவ்விபத்தில் 4 பேரும் படுகாயம்  அடைந்தனர். இதில் அஜித்குமார், பாஸ்கர், கதிர்வேல் ஆகிய 3 பேரும் சம்பவ  இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து  உயிருக்குப் போராடிய அரிகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவர்  மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்புகாரின்பேரில்  திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன் வழக்குப்பதிவு செய்து,  விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றார்.
இதுகுறித்து  அஜித்குமாரின் பெற்றோர் கூறுகையில், ‘எங்களுக்கு ஒரே மகன். நாங்கள்  கூலிவேலை செய்து அவனை காப்பாற்றினோம். அவனும் எங்களது கஷ்டத்தை உணர்ந்து  தனியார் நிறுவனத்தில் வேலை செய்தான். நேற்று முன்தினம் இரவு திருமண  வரவேற்பில் கலந்து கொள்கிறேன் என நண்பருடன் பைக்கில் சென்றவன், அதன்பிறகு  விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் துடித்துவிட்டோம். ஒரே மகனை  இழந்த நாங்கள், இனி எப்படி உயிர் வாழப் போகிறோம்?’ என கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Tiruttani ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் கோபுர கலசம் சேதம்