×

ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்: பவுஞ்சூர் அருகே சோகம்

செய்யூர், அக். 30: பவுஞ்சூர் அருகே ஒரு ஷேர் ஆட்டோவும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஒரு ஷேர் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. இதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பயணம் செய்தனர். இந்த ஆட்டோவை திருவாதூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ இரவு 7 மணியளவில் பவுஞ்சூர் அருகே சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தது. அப்போது பின்னால் கருங்கற்களை ஏற்றி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த ஷேர் ஆட்டோ மீது வேகமாக மோதியது.
இவ்விபத்தில் ஷேர் ஆட்டோ முற்றிலும் நொறுங்கியது.

அதில் பயணம் செய்த டிரைவர் உட்பட 7 பேரும் படுகாயம் அடைந்து அலறி சத்தம் போட்டனர். இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, 7 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் வடமாநிலத்தை சேர்ந்த தர்ணன் (22) என்ற வாலிபர் பலியானார். மற்ற 6 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Truck attack ,accident ,Sher Auto 6 ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...