×

என்டிசி மில்களில் 8.33% போனஸ் உடன்பாடு

கோவை, அக்.26:  தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்திற்குட்பட்ட (என்டிசி) 7 மில்களில் பணியாற்றும் 2,900 தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் தொகை வழங்க உடன்பாடு ஆனது. இந்த போனசை இன்று முதல் வரும் 2ம் தேதிக்குள் பட்டுவாடா செய்வதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகம் (என்டிசி) உட்பட்ட மில்கள் 7 உள்ளது. இதில் கோவையில் கம்போடியா, பங்கஜா, சிஎஸ்அண்ட் டபிள்யூ, முருகன், ரங்கவிலாஸ் ஆகிய 5 மில்களும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் காளியப்பா மில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயனியர் மில் ஆகியவையும் உள்ளது.  இந்த 7 மில்களில் நிரந்தர தொழிலாளர்கள் 1,600 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 1,300 பேர் என மொத்தம் 2,900 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மில்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. இதனால் குறைந்தபட்ச போனஸ் தொகையாக 8.33 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் குறித்து ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த என்டிசி மில்களின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போனஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தொழிற்சங்கங்கள், மத்திய அரசின் மண்டல தொழிலாளர் துறைக்கு போனஸ் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி நேற்று மாலை கோவையில் மத்திய அரசின் மண்டல தொழிலாளர் துறை கமிஷனர் அண்ணாதுரை முன்னிலையில், நிர்வாகம் தரப்பில் என்டிசி தென் மண்டல பொது மேலாளர் வெங்கடேசன், பொது மேலாளர் (நிதி) சுதாகர், பொது மேலாளர் (மனித வளம்) ராஜேந்திரகுமார் ஆகியோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் பார்த்தசாரதி, நாகேந்திரன்(எல்பிஎப்), சீனிவாசன், ஆறுச்சாமி (ஐஎன்டியுசி), பத்மநாபன், சேவியர் (சிஐடியு), கோபால் (ஏடிபி) ஆகியோர் பங்கேற்றனர்.ச்சுவார்த்தையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 8.33 சதவீத போனஸ் தொகையான ரூ.7 ஆயிரம் வழங்குவதாகவும், தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.11 ஆயிரம் சம்பள முன்பணமாக (அட்வான்ஸ்) வழங்குவதாகவும், சம்பள முன்பணத்தை 10 மாதத்தில் சரிசமமாக பிடித்தம் செய்து கொள்வதென்றும் என்டிசி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். போனஸ் மற்றும் சம்பள முன்பணம் ஆகியவற்றை இன்று முதல் வரும் 2ம் தேதிக்குள்  சம்பந்தப்பட்ட மில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு, ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.
 இதுகுறித்து எல்பிஎப் தொழிற்சங்க தலைவர் பார்த்தசாரதி கூறுகையில்,  ‘போனஸ் மற்றும் அட்வான்ஸ் தொகை வழங்குவதன் மூலம் என்டிசி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி செலவாகிறது. என்டிசி நிர்வாகம் நஷ்டமான சூழ்நிலையிலும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகை வழங்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.’
என்றார்.

Tags :
× RELATED அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான...