×

ஜம்பை பேரூராட்சியில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

பவானி, அக். 26: ஜம்பை பேரூராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பவானி அருகே உள்ளது ஜம்பை பேரூராட்சி. பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்திருந்தனர்.  ஆயினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து,  பவானி ஆப்பக்கூடல் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பவானி டிஎஸ்பி சார்லஸ், பவானி தாசில்தார் சிவகாமி, எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் தண்ணீருக்காக மக்கள் அலைவதாக தெரிவித்தனர். குடிநீர் வினியோகம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம், என்றனர்.
இதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் தண்ணீர் வினியோகிக்கும் வரை பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் அறிவித்தனர். இந்நிலையில், குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால் தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் உள்ளதாகவும், விரைவில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.

Tags : Jambi ,Panchayat ,road ,
× RELATED சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து...