×

டிஇஓ இன்சார்ஜ் விவகாரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிஇஓ நடவடிக்கைக்கு திடீர் ஆதரவு

நாமக்கல், அக்.26:  நாமக்கல் டிஇஓ இன்சார்ஜ் விவகாரத்தில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிஇஓ நடவடிக்கைக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் மலர்கண்ணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில்அரசு, விஜயகுமாரி, பொன்னுசாமி, பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், மாவட்ட தலைவர் நல்லதம்பி கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு, மின்னக்கல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலுக்கு அளிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையாகும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில், அவர் முதலிடத்தில் இருப்பதால்,

டிஇஓ பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை கல்வி அலுவலர் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் நியமனம் அளித்துள்ளார். விதிமுறை மீறலும் இல்லை. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக, மூத்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதில், பணி அனுபவத்தில் இளையவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்டத்தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ‘உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், பதவி உயர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலராக வரும் பட்சத்தில்இ நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க போவதில்லை.

ஆனால் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருக்கும் போதே, எங்களுக்கு அவர்களை அதிகாரியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. கடந்த காலங்களில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஒருவர் கூட, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்படவில்லை. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பள்ளிகளில் பணியாற்றியவர்கள் தான் இந்த பொறுப்புக்கு வந்துள்ளனர்,’ என்றார். டிஇஓ பொறுப்பு விவகாரத்தில் உடனடியாக இரண்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஒரு வாரத்துக்கு பின், உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களுடன் இணைந்து தற்போது திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர்.

Tags : DEO Insurage Affair High School ,
× RELATED லாரியில் கடத்தி வந்த 17 மூட்டை குட்கா பறிமுதல்