×

குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் கண்மாயில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை

மதுரை, அக். 26: கண்மாயில் தண்ணீர் தேக்கக் கோரி குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை  விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், விவசாயிகள் பேசுகையில், ‘காவிரி, வைகை, குண்டாறு, தாமிரபரணி ஆறுகளை  இணைக்க ரூ.6,999.14 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதனை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் அடுத்த கட்ட முயற்ச்சியில் ஈடுபடவேண்டும். 2 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேறும். தென் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களின் குடிநீர் பிரச்னையும் தீரும். வைகை அணையில் 69 அடி தண்ணீர் உள்ளது. 58ம் கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும். பெரியாறு அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை எடுக்கும் வகையில் நடவடிக்கை வேண்டும். மதுரை மக்களின் நிலத்தடி நீராதாரமாக இருப்பது மாடக்குளம் கண்மாய். இக்கண்மாயில் மீன்பாசி வளர்க்கக் கூடாது. மீன் குத்தகைக்கு விடக்கூடாது. கண்மாய்க்கு வரும் வரத்துக்கால்வாய் பகுதியான அச்சம்பத்தில், கழிவுநீர் கலந்திருக்கிறது. அவற்றை தடுக்க வேண்டும்.

பாசனத்திற்கு தண்ணீர் திறந்தும் கடைமடை பகுதிக்கு, தண்ணீர் வரவில்லை. கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். விவசாய கடன் எளிய முறையில் வழங்க வேண்டும்’ என்றனர். கலெக்டர் பேசும்போது, ‘‘ஆறுகள் இணைப்பு தொடர்பாக ஏற்கனவே கருத்துரு மத்திய  அரசுக்கு அனுப்பிவிட்டேன். சமீபத்தில் வந்த மத்திய நிதிக்குழுவிடமும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி மனு கொடுத்துள்ளோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்படும். வரத்துக்கால்வாயை அளந்து, நிரந்தரமாக ஆக்கிரமிப்பு இல்லாத வகையில், ஆக்கிரமிப்பு அகற்ற பிர்கா வாரியாக மொத்தம் 51 குழு போடப்பட்டுள்ளது. அவர்களிடம் தினமும் ஆக்கிரமிப்பு அகற்றம், கால்வாய் பணி குறித்து அறிக்கை கேட்டு வருகிறேன்’’ என்றார்.
 கூட்டம் நடக்கும்போது, செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென  கலெக்டரை முற்றுகையிட்டு, எங்கள் பகுதியில் உள்ள கண்மாயிக்கு தண்ணீர்  வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்  பயனில்லை’’என்றனர். பலத்த குரலில் விவசாயிகள் பேசியதால், போலீசார் கூட்டத்திற்குள் நுழைந்து, விவசாயிகளை சுற்றி நின்றனர். கலெக்டர் பேசும்போது, ‘‘உங்கள் பகுதியில் உள்ள கண்மாயில்  தண்ணீர் நிரப்பப்படும். வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்’’ என்றார். இதையடுத்து விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால்  கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் புதிய அணைக்கு எதிர்ப்பு
கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி  பேசும்போது, ‘‘பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்ட மத்திய அரசின்  சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தென் மாவட்ட  விவசாயம் பாதிக்கப்படும். தமிழகத்தில் விவசாயத்தை அழிக்க வேண்டும் என  மத்திய அரசு செயல்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட  மக்களுக்காக கட்டப்பட்டது. கேரளா புதிய அணை கட்டினால் இந்த மாவட்ட மக்களின்  குடிநீர் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த  உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை  எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு மதுரை மாவட்ட விவசாயிகள் கடுமையான  கண்டனத்தை தெரிவிக்கிறோம்’’ என்றார்.
 கண்டனத்திற்கு கூட்டத்தில்  இருந்த அனைத்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். கலெக்டர், ‘‘உங்களின்  கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்’’என்றார்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...