×

நாகர்கோவில் நகராட்சி தேவைகளுக்கு பேச்சிப்பாறை அணை தண்ணீர் எடுக்க எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போர்க்கொடி

நாகர்கோவில், அக்.26:  மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேச்சிப்பாறை அணை தண்ணீரை புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் நகராட்சி எடுப்பதற்கு  கடும் எதிர்ப்பு எழுந்தது.
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, வேளாண்ைம இணை இயக்குனர் சுசீலா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வேத அருள்சேகர் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பத்மதாஸ்: பேச்சிப்பாறை அணை தண்ணீர் முழுக்க முழுக்க விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. கால்வாய்களை முறையாக தூர்வாராததால் கடைவரம்பு பகுதி வரை இன்னும் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கோடைக்காலங்களில் விவசாய நிலங்கள், பயிர்கள் தண்ணீரின்றி பெரிதும் பாதிக்கிறது. இந்நிலையில் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாற்று திட்டங்களை கண்டறிய வேண்டும்.

நகராட்சி ஆணையர் சரவணகுமார்: மிக குறைவான அளவு தண்ணீர் மட்டுமே குழாய்கள் மூலம் எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் முதல் பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் எடுக்கப்பட உள்ளது.

கலெக்டர்: பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கின் முடிவு அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

(அப்போது நாகர்கோவில் நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயி திரவியம் பேசினார். இதற்கு மணவை கண்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  விவசாயிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் இங்கு பிரச்னை செய்ய வேண்டாம். கோர்ட் முடிவு அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.)

தேவதாஸ்: கல்குளம் தாலுகா பகுதிகளில் கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இவற்றில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஹெலிகேம் கேமரா போன்ற நவீன வசதிகளை பயன்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்திற்கு மானியம் வழங்குவதை குமரி மாவட்டத்திற்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
கலெக்டர்: நீர்நிலை ஆக்ரமிப்புகள் அகற்றுவதில் பிற மாவட்டங்களில் இதனை செயல்படுத்துகின்றனர். குமரி மாவட்டத்திலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் அதிகாரி:  ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம் 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்தகட்டத்தில் குமரிமாவட்டத்திற்கும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் வராத நிலையில் திற்பரப்பு வலதுகரை சானலில் தண்ணீர் பாழாகிறது. இந்த தண்ணீரை கொல்லங்கோடு வரை கொண்டு செல்ல திட்டம் வகுக்க வேண்டும். இதற்கு கால்வாய் அமைக்க போதிய புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

கலெக்டர்: இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைவிளை பாசி:  ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அதிகாரி: ஊரக வேலை உறுதி திட்டத்தில் சொத்துக்களை உருவாக்குதல் தொடர்பாகவே வழிமுறைகள் உள்ளன.

பத்மதாஸ்: களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயத்தை குமரி மாவட்ட வனப்பகுதிகளுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அதிகாரி: குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கும் அரசாணை தமிழக அரசால் இயற்றப்பட்டது ஆகும். அதனை ரத்து செய்வது தொடர்பாக அரசின் முடிவே இறுதியானது.

நாகராஜன்:  தேரூர் பகுதியில் நான்குவழி சாலை பணியால் கால்வாய்கள் மூடப்பட்டுள்ளன. தற்காலிக ஏற்பாடாக சிறிய குழாய்கள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தாண்டி மழைக்காலங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் எனக்கு சுமார் ஒன்றரை ஏக்கர் பகுதியில் பப்பாளி மரங்கள் அழுகிவிட்டன. இதற்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும். (உடன் அழுகிய ரப்பர் மரத்தையும் எடுத்து வந்து காண்பித்தார்)

தங்கப்பன்: வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தென்னைமரங்கள் மகசூல் இழப்பை சந்திக்கிறது. குருந்தன்கோடு, முன்சிறை ஒன்றியங்களில் அதிக பாதிப்பு உள்ளது. (அப்போது பாதிக்கப்பட்ட தென்னங்கீற்றுகளை எடுத்து வந்து கலெக்டரிடம் காண்பித்தார்)

கலெக்டர்:  வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது தொடர்பாக விவசாயிகளின் தோட்டத்தில் செயல்விளக்க பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி பட்டறை நிகழ்ச்சிக்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

விவசாயி: காடுகளில் மாடுகள் மேய்க்க விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும்.
கலெக்டர்: இது தொடர்பாக கலெக்டரிடம் அதிகாரம் இல்லை. அரசிடம் இருந்து அனுமதி பெற தொடர்ந்து முயற்சி எடுக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : battlefields ,meeting ,dam ,Nagercoil ,Pettipura ,
× RELATED மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு