×

மின்சார ரயிலில் ஆயுதபூஜை கொண்டாட்டம் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கைது: ‘அன்பு, அராஜகம், வெட்டுக்குத்து’, பச்சையப்பன் கல்லூரி ஆயுதபூஜை என பேனர் கட்டினர்

சென்னை, அக். 26: மின்சார ரயிலில் ஆயுதபூஜை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் 15 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் இருந்து திருத்தணிக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் திருத்தணி நோக்கி மின்சார ரயில் புறப்படுவதற்கு பிளாட்பாரத்தில் தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்கள் மேளதாளங்கள் முழங்க அந்த ரயிலில் ஏறி பாடல்கள் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர்.அதில் சில மாணவர்கள் திடீரென்று ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ‘அன்பு, அராஜகம், வெட்டுக்குத்து’ பச்சையப்பன் கல்லூரி ஆயுதபூஜை என்றும், ‘தி பாய்ஸ் ஆர் பேக், அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கி போகமாட்டோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ரயில்களின் முன்பு கட்டினர். அதன் பிறகு மறுபடியும் மேளங்களை அடித்துக் கொண்டு ரயிலுக்குள் ஏறினர். ஒரு கட்டத்தில் அவர்கள் அராஜகம் அதிகமானதால் பயணிகள் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து ரயில் ஆயுதபூஜை என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர், சென்ட்ரலில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், ரயில்வே விதிகளை மீறியும், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : celebrations ,
× RELATED 2024 புத்தாண்டு தின கொண்டாட்டம்...