×

தெய்வமாக வழிபடும் வவ்வால்களை பாதுகாக்க தீபாவளி பண்டிகையை புறக்கணிக்கும் மக்கள்

காடையாம்பட்டி, அக்.25: காடையாம்பட்டி அருகே பட்டாசு சத்தம் கேட்டு வவ்வால்கள் அலறுவதை தவிர்க்க, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒரு கிராம மக்கள் புறக்கணித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி அருகே வவ்வால்தோப்பு என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் வவ்வால்கள் அதிகளவில் குடியிருந்து வருகின்றன. பல ஆண்டுகளாக மாலை நேரங்களில் மரத்தில் குவியும் நூற்றுக்கணக்கான வவ்வால்களையும், இதர பறவைகளையும் அங்குள்ள மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். மேலும், மரத்தின் அடியில் முனியப்பன் சுவாமி சிலையை வைத்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தி வருகின்றனர்.
இந்த மரத்தில் உள்ள வவ்வால்கள் தினசரி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மலைப்பகுதிக்கு செல்லும். அங்கு இரைதேடி விட்டு அதிகாலை 5 மணிக்கு மீண்டும் மரத்தை வந்தடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மரத்தில் இருக்கும் வவ்வால்களை வேட்டையாடவோ, அதை துன்புறுத்தவோ அங்குள்ளவர்கள் யாரும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகையின்போது, இதர விசேஷ காலங்களின்போதும் பண்ணப்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடிக்க தடை போடப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் பயந்து வேறு பகுதிக்கு சென்று விடும் என்ற அச்சத்தாலும், அதனால் தங்களுடைய கிராமத்திற்கு பாதிப்பு வந்து விடும் என பயத்தாலும் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து பண்ணப்பட்டி மக்கள் கூறும்போது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அனைத்து வவ்வால்களும் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் இருந்த மரத்திற்கு சென்று விட்டது. அப்போது பண்ணப்பட்டி, வவ்வால்தோப்பு பகுதி மக்கள் ஒன்றுகூடி, வவ்வால்கள் இங்கிருந்து சென்றதால் ஊருக்கு கெடுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நடுப்பட்டிக்கு சென்று மரத்தில் உள்ள வவ்வால்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மீண்டும் திரும்பி வருமாறு வேண்டுதல் வைத்தோம். மறுநாளே வவ்வால்கள் அனைத்தும் வந்துசேர்ந்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பறவைகளை காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் எங்களுடைய கிராமம் தீபாவளியை கொண்டாடுவதில்லை, என்றனர்.

Tags : goddesses ,festival ,Deepavali ,
× RELATED வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு