×

வம்பன் வேளாண் நிலையம் மூலம் குதிரைவாலி புதிய ரக செயல்விளக்க திடல்

ஆலங்குடி, அக்.25: ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் குதிரைவாலி  புதிய ரகம் செயல் விளக்க திடலை வேளாண் பேராசிரியர் பார்வையிட்டு  விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிடப்பட்ட குதிரைவாலி மதுரை-1 என்ற புதிய ரகத்தின் செயல் விளக்கத்திடல் கருக்குழிக்காடு, ஆயிங்குடி மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்விளக்க திடலை வம்பன் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை உதவிப்பேராசிரியர் பிரபுகுமார் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், மதுரை-1 ரகமானது 95-100 நாட்கள் வயதுடையது. இது அனைத்துப் பருவத்திற்கும் ஏற்றது. எக்டருக்கு 5-6 கிலோ விதை போதுமானது. 25x10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குறைவான நீர் போதுமானது. தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 66:33:20 என்ற அளவில் இடவேண்டும். இந்த ரகம் இரும்புச்சத்து கொண்டது. ஒரு எக்டருக்கு மானாவாரியில் 1700 கிலோவும், இறவையில் 2,500 கிலோவும் தரும். அதிக அரவைத்திறன் உடையது என்றார்.

Tags : Crib ,Vamban Agricultural Center ,
× RELATED மாடு முட்டித்தள்ளியதில் கிணற்றில்...