×

சவடு மண் அள்ள உரிமம் பெற்று குண்டாறு, கிருதுமால் படுகையில் ஆற்று மணல் அள்ளப்படுகிறதா? மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை, அக். 25: சவடு மண் அள்ளும் உரிமத்தை வைத்து குண்டாறு, கிருதுமால் படுகையில் ஆற்று மணல் அள்ளுவதாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கிருதுமால் நதி படுகையில் வீரசோழன், ஆனைக்குளம், சேதுபுரம், சொக்கம்பட்டி, அருப்புக்கோட்டை, நரிக்குடி, மண்டல மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவடு மண் அள்ளுவதாகக் கூறி உரிமம் பெற்று ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக அள்ளுகின்றனர். சுமார் 25 அடி ஆழம் வரை சட்ட விரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் போலி ரசீதுகள் தயாரித்து மணல் விற்பனை செய்கின்றனர்.

எனவே குண்டாறு, கிருதுமால் நதிப்படுகையில் சவடு மண் அள்ள வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவும், வக்கீல் கமிஷனரை நியமித்து விதிமீறலை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட பகுதியில் குவாரி நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டுமென கூறி பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் தரப்பில் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பார்க்கும்போது விதிமீறல் நடந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவது உறுதியாகிறது. அதிகாரிகள் உள்ளிட்ட யார் ஆய்வுக்கு சென்றாலும் அடியாட்கள் மூலம் மிரட்டப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிபதி, குண்டாறு மற்றும் கிருதுமால் நதி படுகையில் நரிக்குடி, திருச்சுழி, மண்டல மாணிக்கம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முழுமையாக ஆய்வு செய்து, தனது விரிவான அறிக்கையை நவ.1ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : inspection ,Kruthumal Bhai The District Judge ,
× RELATED நெடுஞ்சாலை பணிகளை தணிக்கை குழு ஆய்வு