கம்பம், அக். 25: சுருளி அருவிப்பகுதியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னாபிஷேகம் என்பது படியளக்கும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னமிட்டபோது அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டார். சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. இதனால் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்களில் `அன்னாபிஷேகம்’ கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது என்பது ஐதிகம்.
நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு புண்ணிய தலமான சுருளி அருவியில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பதினெட்டு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் முழுவதும் வடித்து ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு மறைத்து, அதன் மேலாக காய், கனி வகைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
மீத உணவு நீர்வாழ் உயிர்களுக்காக சுருளி புண்ணிய நதியில் கரைக்கப்பட்டது. அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.