×

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மங்களநாத சுவாமிக்கு அன்னாபிஷேகம்

ராமநாதபுரம், அக்.25:  ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.  ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அன்னாபிஷேக பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜையில் பச்சரிசி சாதம், காய்கறிகள், பட்சனங்களால் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மக்கள் வழிபாடு செய்வார்கள்.

உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி ஆலயத்தில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலை ருத்ரஜெபத்துடன் அன்னாபிஷேக பூஜைகள் துவங்கியது. 21 வகையான மூலிகை பொருட்களாலும், புனித தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது. 101 படி அன்னம் சாத்தப்பட்டு, காய்கனிகள், பட்சணங்கள், எலும்மிச்சை பழ மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. வில்வ அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்படிக லிங்கம், மரகத லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள்,விவசாயிகள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Annapishekam ,occasion ,Mangalanada Swamy ,
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...