×

தொழுநோய் கண்டறியும் முகாம்

குஜிலியம்பாறை, அக்.25: குஜிலியம்பாறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒன்றிய பகுதி முழுவதும் தீவிர தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, நோய் பாதிப்பை தடுத்து சிகிச்சை அளிக்க கிராமப்புறங்களில் உள்ள வீடுகள்தோறும் நேரிடையாக நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 22ம் தேதி முகாம் தொடங்கியது. வரும் 9ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 10 மேற்பார்வையாளர்கள் தலைமையில் 52 குழுக்கள் உள்ளன.

இந்த குழுவினர் தினந்தோறும் 30 வீடுகளுக்கு நேரிடையாக சென்று தொழுநோய் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் சத்துணவு பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், சுயஉதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முகாமில் தொழுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் குஜிலியம்பாறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். முன்னதாக இக்குழுவில் உள்ளவர்களுக்கு தொழுநோய் கண்டறியும் சிறப்பு பயிற்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமையில் நடந்தது. இதில் மருத்துவ அலுவலர் வசந்த், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Leukemia detective camp ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி