×

6 லட்சம் உணவு நிறுவனங்கள் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் புதுப்பிக்க வேண்டும் தவறினால் நாள் ஒன்றுக்கு ₹100 அபராதம் தமிழகம் முழுவதும்

வேலூர், அக்.25: தமிழகம் முழுவதும் 6 லட்சம் உணவு நிறுவனங்கள் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் புதுப்பிக்க வேண்டும். தவறினால் நாள் ஒன்றுக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும் என்று உணவுப்பாதுகாப்பு ஆணையரகம் எச்சரித்துள்ளது.தமிழகம் முழுவதும் ஓட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், காய்கறி கடை, மளிகை கடை, இறைச்சி கடை, பானிபூரி கடை உட்பட அனைத்து வகையான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.உணவுப்பொருட்கள் விற்பனையில், ஆண்டுக்கு ₹12 லட்சத்திற்கு மேல் வணிகம் செய்பவர்கள் ₹2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு ₹12 லட்சத்திற்கு கீழ் வணிகம் செய்பவர்கள் ₹100 செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டும். உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய உரிமம், பதிவுச் சான்று கட்டாயம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் உணவு தொடர்பான நிறுவனங்கள், கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு தொடர்பான உரிமம் வரும் நவம்பர் மாதத்தில் காலாவதியாக உள்ளது.எனவே தமிழகத்தில் உள்ள 6 லட்சம் உணவு நிறுவனங்களில், 5 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றவர்கள் தவிர மற்ற நிறுவனங்கள் எப்எஸ்எஸ்ஏஐ உரிமம் காலாவதியாவதற்கு முன்னதாக விண்ணப்பித்து உரிமம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.இதற்காக உணவுபாதுகாப்புத்துறை மூலம் 60 நாட்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், கடை உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அவர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ₹100 அபராதம் விதிக்கப்படும்.அத்துடன் ஏற்கனவே பெற்றுவந்த எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் கிடைக்காமல் போகும். காலாவதியான எப்எஸ்எஸ்ஏஐ நம்பர் கொண்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் அந்த பொருட்கள் காலாவதியானதாக கருதப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : food companies ,FSSAI ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...