×

உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாததால் கொசு உற்பத்தி மையமாகும் சாலையோர குப்பை குவியல்

திருவள்ளூர், அக். 25: உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியலை அகற்ற துப்புரவு தொழிலாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால்தான் கொசுகள் பெருமளவில் பெருகி மக்களை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பல உள்ளாட்சிசாலையில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கினால் குப்பையில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பண்ணையாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உரல், அம்மி கல்லை சோதிக்கும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் பல லட்சம் ரூபாய் செலவில் சாலை பணிகள் நடந்துள்ளன. இந்த சாலைகளில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால் சாலையிலேயே நீர் தேங்குகிறது. இதை உடனே பராமரிக்காததாலும், சாலையில் ஏற்பட்ட சிறியபள்ளம் பெரியகுழியாக மாறி தண்ணீர் தேங்குவதாலும் கொசு உற்பத்தி அதிகமாகிறது. நகராட்சிகளில் குப்பை அகற்ற துப்புரவு ஊழியர்கள், கண்காணிக்க ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர் உள்ளனர். இந்த குப்பையை அகற்றி வாகனங்களில் ஏற்றி கிடங்குகளில் கொட்ட வாகன வசதியும் உள்ளது. ஆள் பற்றாக்குறையால் இந்த பணியிலும் தற்போது தொய்வு ஏற்பட்டு உள்ளது. கொசு உற்பத்திக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. குப்பையை உடனே அகற்ற முடியாதபட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாட்டையாவது நகராட்சி அமைப்பு செய்ய வேண்டும்.

ஊராட்சிகளில் குறைந்த வருமானத்தில் துப்புரவு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வாகனம் போன்ற வசதிகள் இல்லை. குப்பை கிடங்கு என தனியாக எதுவும் இல்லை. ஒரு இடத்தில் சேரும் குப்பையை எடுத்து சென்று மற்றொரு இடத்தில் கொட்டுகின்றனர். பூந்தமல்லி ஒன்றியம் கூடப்பாக்கம் உட்பட பல இடங்களில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் வேறு வழியின்றி இது தொடர்கிறது. கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாததால் நெடுஞ்சாலை, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் குப்பை கொட்டப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், சாலையில் செல்பவர்கள், சுற்று பகுதியில் குடியிருப்பவர்கள் துர்நாற்ற பிரச்னையை சந்திக்கின்றனர். குப்பையில் தேங்கி உள்ள மழைநீரில் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்கள் ஏற்பட காரணமாகிறது. கொசுக்கள் மூலம் யானைக்கால், சிக்குன் குன்யா, மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரம், சிமென்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், தெருவில் உள்ள உரல், அம்மிக்கல், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் சோதனை நடத்தி கொசுப்புழுவை கண்டுபிடித்து அழிக்கும் சுகாதார ஊழியர்கள், குப்பையில் கொசு உற்பத்தியாவதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கூறுகையில், ‘’சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் துர்நாற்ற பிரச்னை ஏற்படுகிறது. இதில் இறந்த பூனை, எலி, நாய்களை போட்டுவிட்டு செல்கின்றனர். துப்புரவு தொழிலாளர்களிடம் கூறினால் அலட்சியமான பதில் வருகிறது. மழைநீருடன் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் கொசு உற்பத்தி மையமாக மாறுகிறது. இதனால் டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது’ என்றனர்.

Tags : mosquito hub ,administration ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...