×

சிட்லபாக்கம் பேரூராட்சியில் நடந்த பொதுப்பணித்துறை பணியில் ஊழல் சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம், அக். 25: சிட்லபாக்கம் பேரூராட்சியின் நிர்வாக ஊழலை கண்டித்தும், விளக்கம் கேட்ட சமூக ஆர்வலர்கள் கைதை கண்டித்தும் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் பேரூராட்சியின் ஊழல் நிர்வாகத்தை கண்டித்தும், பணிகளின் முறைகேடுகள் குறித்து கேள்விகள் எழுப்பிய சமூக ஆர்வலர்களை கைது செய்ததை கண்டித்தும், காஞ்சி வடக்கு மாவட்ட, புனித தோமையார் மலை ஒன்றியம், சிட்லபாக்கம் பேரூர் திமுக சார்பில் சிட்லபாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது. புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேவேந்திரன், மூர்த்தி, வேல்முருகன், செம்பாக்கம் சுரேஷ், ஜோதிகுமார், செல்வகுமார், சிட்லபாக்கம் சுரேஷ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு பேசியதாவது: சிட்லபாக்கம் பேரூராட்சியின் நிர்வாகம், மாவட்ட அரசு அதிகாரிகள், சிட்லப்பாக்கம் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் காவல் துறையை கையிலே வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.

சிட்லபாக்கம் பகுதியில் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து சிட்லபாக்கம் ரைசிங் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சிட்லபாக்கம் பகுதியில் என்ன என்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த பிரச்னைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்வதும், அரசு அதிகாரிகள் மத்தியில் எடுத்து செல்வதும், மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற எங்கள் மத்தியில் கொண்டுவருவதும் என பொதுசேவையாக செய்து வருகின்றனர். ஆனால் அவர்களை இங்கு சிட்லப்பாக்கத்தில் இருக்கக்கூடிய அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையை வைத்து வைத்துக்கொண்டு கைது படலத்தில் இறங்கி இருக்கிறார். சிட்லபாக்கம் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகள் குறித்து சிட்லபாக்கம் ரைசிங்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அந்த பணிகள் குறித்த ஆணையை கொடுக்கும்படியும், அதன் மதிப்பு மற்றும் தரம் பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது குறித்து தகவல் அறிந்து நான் சிட்லபாக்கம் காவல் நிலையம் சென்று விசாரித்தபோது இது மேல் இடத்து உத்தரவு எங்களால் ஒன்று செய்ய முடியாது என தெரிவித்தனர். சிட்லபாக்கம் பேரூராட்சி அலுவலகம், பிடிஓ அலுவலகம் என அனைத்து அலுவலகங்களுக்கும் வரும் பொதுமக்களின் பணிகளை சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவரது பினாமிகள் மூலம் இதே பகுதியில் தனியாக வீடு எடுத்து அங்கு அவர்களை வரவழைத்து ஒவ்வொரு பணிகளுக்கு எவ்வளவு ரூபாய் என தீர்மானித்து அதன் மூலம் பணிகளை செய்தும் போலி பத்திரங்களை தயாரித்தும் அவரது பினாமிகள் மூலம் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஏழை மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வெள்ளதடுப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: கலெக்டர் விளக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் சிட்லபாக்கத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டுபேர் வேலை தொடங்கியதற்கான வேலை உத்தரவைக் காட்டுமாறு  கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் அரசு ஊழியர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.   இதனையடுத்து அரசு ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் சிட்லபாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிட்லபாக்கத்தில் தண்ணீர் ஏற்கனவே எந்த வழியில் செல்கிறதோ, அதே வழியில் செல்வதற்கு ₹17 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டது.

அதில் பொதுப்பணித்துறை மூலமாக ₹12 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி நிர்வாகத்துறை மூலம் மாநில நிர்வாக நிதி ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்தப் பணிகள் எந்த திட்டத்தின்கீழ் நடைபெறுகிறது என்று அவர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்தினால் வேலை உத்தரவைக் காட்டுமாறு பணியில் இருந்த ஊழியர்களிடம் வரம்பு மீறி நடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேருராட்சிகள் துறை உதவி இயக்குநர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நவம்பர், டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ₹17 கோடி டெண்டர் முறைகேடு என்பது தவறான தகவல். டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நடைபெற்று உள்ளது.

இ டெண்டர், தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி, 2 நாளிதழ்களில் விளம்பரம், மாநில ஒப்பந்தப் புள்ளி செய்திமலர், அலுவலக அறிவிப்புப் பலகை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முறையாக செய்யப்பட்டுள்ளது. அரசின் பெருமழையை எதிர்கொள்ள பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து வேலை செய்யும்போது அதுகுறித்து அரசின் தொழில்நுட்ப தகவல்கள் உரிய அதிகாரிகளுக்குத் தெரியும். அதன்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. புரிதலில் ஏற்பட்ட குளறுபடியால் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை கொடுத்த வழிகாட்டுதல்படியே அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலை உத்தரவைக் காட்டுமாறு கேட்டு வரம்பு மீறி நடந்ததால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

Tags : protests ,DMK ,activists ,Panipat ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி