×

கடனை திருப்பிக் கேட்டவரை அடித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சௌகத் அலி மகன் ஷேக் பரீத் (24). திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் முருகைய்யா (42). இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் காந்தி ரோடில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் தனது சொந்த செலவிற்காக முருகைய்யா ஷேக் பரீத்திடம் ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இரவு ஷேக் பரீத் கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்குமாறு முருகைய்யாவிடம் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த முருகைய்யா அங்கிருந்த இரும்பு ராடால் ஷேக் பரீத் மண்டையில் பலமாகத் தாக்கினார். இதனால் நிலைகுலைந்த ஷேக்பரீத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இது சம்பந்தமாக கடை உரிமையாளர் ராம்மோகன்ராவ் கொடுத்த புகாரின்பேரில் விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரண  முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முருகைய்யாவிற்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சம்பத் ஆஜராகி வாதாடினார்.

Tags :
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...