×

ஈஸ்வரன் கோயில்களில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் செவிலிமேடு காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள 180 சிவாலயங்களிலும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்தவகையில் செவிலிமேட்டில்  அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு வெண்டைக்காய் புடலங்காய் சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி மற்றும் வாழைப்பழம் ஆப்பிள் சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இந்த அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்வதால் ஆண்டு முழுவதும் உணவிற்கு குறையிருக்காது என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  சுவாமி தரிசனம் செய்ய வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோன்று  கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், நகரீஸ்வரர் கோயில், அறம்வளத்தீஸ்வரர் கோயில், காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில், திருக்கச்சி நம்பி தெரு முத்தீஸ்வரர் கோயில், தவளேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர். புதுப்பட்டினம் சற்குரு ஞானசித்தர் ஆலயத்தில் உள்ள ஜெயநாராயணீஸ்வரர் மற்றும் சற்குரு ஞானசித்தருக்கு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஈஸ்வரனை வழிபட்டனர்.

Tags : Annapishekam ,Easwaran ,temples ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து