×

முத்துப்பேட்டையில் குப்பை கிடங்கு, கழிவுநீர் வாய்க்காலாக மாறிய கல்கேணிக்குளம்

முத்துப்பேட்டை, அக்.23: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 16-வது வார்டு பகுதியான கல்கேணிக்குளத்தெரு குடியிருப்பு பகுதியில் மிகப்பெரிய பரப்பளவில் கல்கேணிக்குளம் அமைந்து உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்த குளத்தில் ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் குளித்தும், குடிநீருக்காகவும் பயன்படுத்தி வந்தனர்.  இந்த குளத்திற்கு நகரில் உள்ள குண்டாங்குளம், பட்டரைக்குளம், நூறாங்குண்டுகுளம் ஆகியவைகளை இணைக்கின்ற வகையில் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு நீர்வரத்து இருந்து வந்தது. தற்பொழுது இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்ததால் இந்த குளத்திற்கு தண்ணீர் வரவேண்டிய வாய்க்கால்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது, மேலும் மழைக்காலங்களில் இந்த குளம் நிறைந்து தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலையும் உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் வருடக்கணக்கில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. வறட்சி காலங்களில் வறண்டு இப்பகுதி நிலத்தடி நீரை இன்னும் பல அடி கீழே செல்ல காரணமாகவும் உள்ளது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கழிவு நீர் மற்றும் செப்டி டேங்க் கழிவுகளை இந்த குளத்தில் குழாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பேரூராட்சி சார்பில் முறையான வடிகால் வசதி இல்லாததால் பல பகுதியில் உள்ள கழிவு நீரும் இந்த குளத்தில் வடிந்து வருகிறது. அதே போல் அப்பகுதியில் உள்ளவர்களும் பேரூராட்சி பணியாளர்களும் குப்பைகளை கொட்டும் இடமாகவும் இந்த குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குளம் முழுவதும் அசுத்தமாக கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. கோரை செடிகளும் கருவை முள் மரங்களும் குளம் தெரியாத அளவில் மண்டிக்கிடக்கிறது.

மேலும் துர்நாற்றமும் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் வசிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அடிக்கடி பல்வேறு தொற்று நோய்களும் பரவி வருகிறது. இந்த அசுத்தம் அடைந்த குளத்தை சீரமைத்து தரும் வகையில் குளத்திலும், அதன் கிளை வாய்க்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garbage warehouses ,Muthupet ,
× RELATED எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி