×

பட்டாசு கடை வைக்க தடையில்லா சான்று கேட்டு தீயணைப்பு துறையிடம் 400 பேர் விண்ணப்பம்

சேலம், அக்.23: சேலத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க தடையில்லா சான்று கேட்டு தீயணைப்புத்துறையிடம் 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள். தீபாவளியன்று புத்தாடை அணிந்து நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடிப்பது சிறியவர்கள் முதல் பெரியர்வகள் வரை ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் இரு வாரமே இருக்கும்பட்சத்தில் சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பட்டாசை உரிமையாளர்கள் அவ்வப்போது விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை பட்டாசு கடை வைப்போர் பட்டாசு வாங்க சிவகாசிக்கு விரைந்துள்ளனர். அங்கு பட்டாசு தேர்வு செய்து, அந்தந்த பகுதிக்கு கொண்டு வருகின்றனர். பட்டாசு கடை வைக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. மாநகர பகுதியில் உள்ளவர்கள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் லைசென்ஸ்பெற வேண்டும் என்றும், தீயணைப்புத்துறையினரிடம் தடையில்லா சான் பெற வேண்டும் என்று உள்ளது. மாவட்ட பகுதியில் பட்டாசு கடை வைக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் லைசென்ஸ் பெற வேண்டும் என்று உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதை சேலம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் தடையில்லாச்சான்று கேட்டு, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இது குறித்து சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடை வைப்போர் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பான் கருவி கட்டாயம் இருக்கவேண்டும். வாளியில் மணல், தண்ணீர் இருக்கவேண்டும். அதிகம் சூடாகும் பல்புகளை பொருத்தக்கூடாது. டியூப் லைட் பொருத்தலாம். கடைகளை மூடிவிட்டு போகும்போது மின்இணைப்பை துண்டித்துவிட்டு செல்லவேண்டும். கதவு,ஜன்னல்களை திறந்து வைத்து செல்லக்கூடாது. தீப்பிடிக்கும் பொருள்களை வைத்திருக்கக்கூடாது. பட்டாசு பயன்படுத்தும் பொதுமக்கள் மருத்துவமனை, பெட்ரோல்
பங்க், மண்ணெய்ணெய் கடை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர், சிறுமியர்கள் பட்டாசு வெடிக்கும் பெற்றோர் அல்லது உறவினர்களை கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது. குடியிருப்பு பகுதியில் ராக்கெட் வெடிக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும் போது வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். காலை 6 மணிக்கு மேலேயும், இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் மீட்பு