×

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை நாமக்கல் கோர்ட்டில் 4 பேர் சாட்சியம்

நாமக்கல், அக்.23: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், நாமக்கல் நீதிமன்றத்தில் நேற்று 4 பேர் சாட்சியம் அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினீயர் கோகுல்ராஜ்(23) கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்று வருகிறது. கோகுல்ராஜின் தாய் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கல்லூரி தோழி சுவாதி, அவரது தாய் செல்வி, மற்றும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், விஏஓக்கள் என மொத்தம் 22 பேர் இதுவரை சாட்சியம் அளித்து உள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை, நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடந்தது. அப்போது இந்த வழக்கில் போலீசாரல் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 14 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோகுல்ராஜ் படித்த தனியார் கல்லூரி பேராசிரியர் பெரியசாமி, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் டிக்கெட் வழங்கும் பணியாளர் தங்கவேல், லாரி டிரைவர் தாசன், பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி ஜெகநாதன் ஆகிய 4 பேர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இவர்களிடம் அரசு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து நீதிபதி இளவழகன், வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜை(41) நேற்று போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரவில்லை. போதிய போலீசார் இல்லாததால் அவரை அழைத்து வர முடியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Tags : murder case trial ,
× RELATED கும்பகோணம் பாமக பிரமுகர் கொலை வழக்கு...