×

இந்திர தல தீர்த்த படித்துறையில் புஷ்கர நிறைவு விழா தீப ஆரத்தி

வி.கே.புரம், அக். 23:  பாபநாசம் இந்திர தல தீர்த்த படித்துறையில் புஷ்கர நிறைவு விழா தீப ஆரத்தி நடந்தது. கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி தாயாருக்கு புஷ்பாஞ்சலியும், சேரன்மகாதேவியும் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா, பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 11ம் தேதி துவங்கி நடந்து வந்தது. 12வது நாளான நேற்று நிறைவு விழாவையொட்டி அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பாபநாசத்தில் புனித நீராடினர்.
பக்தர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலம் பாபநாசத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனங்கள், பழைய பாபநாசம் சாலையில் நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சென்ற வந்தனர். நேற்று முன்தினத்தைவிட நேற்று கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
பாபநாசத்தில் அகில இந்திய துறவியர்கள் சங்கம் சார்பில் பெண் துறவிகளின் குரு பூஜை மற்றும் பாத பூஜை சிறப்பு மாநாடு நடந்தது. தொடர்ந்து துறவிகள் சங்க   துணை தலைவர் மன்னார்குடி ஜீயர், விழா நிறைவு குறிக்கும் வகையில் சங்க கொடியை இறக்கி வைத்தார். விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அம்பை டிஎஸ்பி ஜாகீர்உசேனுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.  மாலையில் இந்திர தல தீர்த்த படித்துறையில் நிறைவு தீப ஆர்த்தி நிகழ்ச்சி நடந்தது.
பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் சார்பில் காலையில் ராஜேனீஸ்வரன்சுவாமி  தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் முருகன்நாதன்சாமி, தங்கமணிசாமி,           உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் பாபநாசத்தில  16 கருவிகளுடன் தமிழ் ஆகம விதிப்படி நிறைவு  தீப ஆர்த்தி நடந்தது.
அம்பை காசிநாதர் கோயில் தீர்த்தவாரி படித்துறையில், மகா புஷ்கர நிறைவு நாளான நேற்று நதிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர்.
கல்லிடைக்குறிச்சி தாமிரபரணீஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தாமிரபரணி மகா யாகம், 10.45 மணிக்கு புஷ்கர மகா யாகம் நிறைவு, மாதா தாமிரபரணி பூர்ணாஹூதி அபிஷேகம், 11 மணிக்கு 108 வலம்புரி சங்கு பூஜை, 11.20க்கு தீர்த்தவாரி புஷ்கர நீராட்டு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புனித நீராடினர்.
மாலை 5.15 மணிக்கு கோடிகுங்குமம் அர்ச்சனை நிறைவு, 5.30 மணிக்கு புஷ்பாஞ்சலி, 6.05 மணியளவில் நதி ஆராத்தி நடைபெற்றது. ப்ருகு தீர்த்தக்கட்டத்தில் கல்லிடை கண்வ தீர்த்தத்தில் நதிக்கு அபிஷேகம் தீர்த்தவாரி நடந்தது. மாலையில் தாமிரபரணி தாயாருக்கு புஷ்பாஷ்சலி நடந்தது. ஊர்காடு ராமர் கோயில் படித்துறை, ஆஞ்சநேயர் கோயில் படித்துறை, சங்கரன்கோயில், ஆலடியூர், நட்டாத்தியம்மன், மனோந்தியப்பர் ஆகிய படித்துறைகளில் கோ பூஜை சிறப்பு பூஜைகள், ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி கரந்தையார்பாளையம் பிராமண மகா சமூகம் வரக தீர்த்தக் கட்டத்தில் ஸங்கல்ப ஸ்நானம் ருத்ர ஏகாதசினி வஸோர்தாரா மஹா பூர்ணாஹூதி பூஜை நடந்தது. தொடர்ந்து நதியில் பூ போட்டு சிறப்பு ஆரத்தி பூஜை நடந்தது. மதியம் கஜ பூஜை, மாலையில் ஆதி சங்கராச்சாரிய அஷ்டோத்ர பாராயாணம், ஸகஸ்ரநாம பாராயணம், லலிதா ஸஹஸ்ர நாமபாராயணம் தாமிரபரணி மாதா அஷ்டோத்ர பாராயணம் நதி பூஜை மற்றும் ஆரத்தி நடந்தது. கல்லிடை தொந்தி விளாகம் தெருவில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி மடத்தில் ஸதசண்டி ஹோமம், மஹா ருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, மகாபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தது.
வீரவநல்லூர்: சேரன்மகாதேவி வியாச தீர்த்தக்கட்டத்தில் புஷ்கர விழாவானது கடந்த அக்.11ல் கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலை ஆரத்தி பூஜை, விளக்கு பூஜை, திருவாசகம் முற்றோதுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவுநாளான நேற்று மேலகண்டளவு தெரு, ஆலடித்தெரு, ஜெயந்திநகர் மற்றும் ஆலடி அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தவச்சலபெருமாள் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து படித்துறையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைப்பாரி ஆற்றில் விடப்பட்டது.
இதையடுத்து கோயில் வளாகத்தில் நடந்த புஷ்கர நிறைவு விழா நிகழ்ச்சிக்கு பரத்வாஜ் ஆசிரமம் சுவாமி நிர்மாலனந்தா தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபநாசம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெனிதா கலந்துகொண்டு பேசினார். விழாவில் கிராமத்து குயிலோசையில் தாமிரபரணி என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது.
இதில் தாசில்தார் சொர்ணம், முதுகலை ஆசிரியர் பெருமாள், சந்திரபுஷ்பம் பிரபு, வழக்கறிஞர் சுசிந்திரன், விழா குழுவினர்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pushkar ,ceremony ,Deepa Arati ,Indra Tala Theertha ,
× RELATED திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை...