×

உத்திரமேரூர் அருகே உள்ள கல்குவாரிக்கு தடைவிதிக்க கோரிக்கை

காஞ்சிபுரம், அக்.23: உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரியில் உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மனு விவரம்: உத்திரமேரூர் அடுத்துள்ள ஆலஞ்சேரி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் அருங்குன்றம், பழவேரி, திருமுக்கூடல், அரும்புலியூர், காவணிபாக்கம் உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம், கால் நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் ஆகியவையும் உள்ளன. கிராமத்தின் ஏரிக்கு மேற்புரத்தில் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கிராமத்திற்கு மலையில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாகத் தடைசெய்யப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
பாறையை தகர்ப்பதற்காக வைக்கப்படும் வெடி பெரும் புகை மூட்டத்தையும் இறைச்சலையும் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து சிதறும் கற்கள் விவசாய நிலங்களில் விழுகிறது. இதனால் விளைச்சல் குறைவதோடு மண்ணின் தன்மையும் மாறுபடுகிறது.
மேலும் காற்றில் பறந்துவரும் சிதறல்களாலும் இறைச்சலாலும்  குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய் பாதிக்கப்படுகிறது.  எனவே கிராம மக்களையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் கல்குவாரிக்கு தடை விதிக்க  தக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்

Tags : Gulwavari ,Uttirameroor ,
× RELATED குடியிருப்புகள் பகுதியில் கல்குவாரி...