×

வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

கரூர், அக்.23:  கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பாசனக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த 5ஆண்டுக்கும் மேலாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து வறட்சி, மழையின்மை காரணமாக மக்கள் குடிநீருக்கே சிரமப்படுகின்றனர். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே காவிரியில் வெள்ளநீர் வரும்போது குளத்திற்கு தண்ணீர் நிரப்பலாம். அதற்கான திட்டத்தை கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளியணை பெரியகுளத்திற்கு குடகனாற்றில் இருந்து தண்ணீர் வரும். கடந்த 5 ஆண்டுகளாக மழையின்மை காரணமாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர்வரவில்லை. பிறபகுதிகளில் மழைபெய்தும் குடகனாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட எல்லையிலும் குடகனாறு அணை உள்ளது. காவிரியில் உபரிநீர் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு எங்கள் ஊர்வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்கின்றனர். அப்படியிருக்கும்போது வெள்ளியணைக்கு தண்ணீரை கொண்டுவர திட்டம் செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரியாற்றில் இருந்து 17கி.மீ உள்ளது வெள்ளியணை பெரியகுளம். ராட்சத குழாய்களை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் நீர்உந்து செய்யப்பட்டு குளத்தை அடையுமாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். குடகனாறு அணையில் இருந்து வெள்ளியணை 15கி.மீ தூரத்தில் உள்ளது. மாயனூர் 17கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாசனத்திற்கும் நீர்கிடைக்கும். நீராதாரமும் பெருகும். கலெக்டர் குளத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : pond ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்