×

செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் ெதால்லை மாணவர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு : வகுப்பறையில் புகுந்து ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்

செங்கம், அக்.23: செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மொத்தம் 220 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உட்பட மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த தாமரைநகரை சேர்ந்த கணினி ஆசிரியர் கண்ணன்(46) நேற்று காலை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, வகுப்பறைக்குள் புகுந்த கும்பல் ஒன்று மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி திடீரென ஆசிரியரை சரமாரி அடித்து உதைத்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது. இதைப்பார்த்து அச்சமடைந்த மாணவர்கள் கூச்சலிட்டபடி வகுப்பறைக்குள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி கந்தசாமி, தாசில்தார் (பொறுப்பு) சங்கரன், பாச்சல் இன்ஸ்பெக்டர் பூபதி, செங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த ஆசிரியரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த மாதம் 15ம் தேதி சிறப்பு வகுப்புக்கு வராததால், மேல்நாச்சிப்பட்டு சேர்ந்த 10ம் மாணவியை கணினி ஆசிரியர் கண்ணன் அடித்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த 24ம் தேதி மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வகுப்பறையில் புகுந்த கும்பல் ஆசிரியரை சரமாரி அடித்து உதைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

இதுகுறித்து செங்கம் கல்வி மாவட்ட அதிகாரி கந்தசாமி கூறுகையில், ‘வகுப்பறையில் புகுந்து மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தாக்கப்பட்ட ஆசிரியர் மீது இதற்கு முன்பாக எந்தவித புகாரும் வந்ததில்லை. அதேபோல், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில் நல்லவிதமாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். பாக்ஸ்... பக்கத்து கிராமத்தினர் தாக்கியது அம்பலம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் பாச்சல் போலீசில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து மேல்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, எங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மேல்நாச்சிப்பட்டு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு, எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியரை தாக்கியவர்கள் மேல்நாச்சிப்பட்டு அடுத்த வடமாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனால், தனிப்பட்ட காரணங்களால் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Tags : Chengam ,school student ,
× RELATED சத்தியமங்கலம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி