×

டிரான்ஸ்பார்மர் பழுதால் மேல்கரைப்பட்டியில் 20நாளாக இருள் பொதுமக்கள் கடும் அவதி

பழநி, அக். 23:  டிரான்ஸ்பார்மர் பழுதால் பழநி அருகே மேல்கரைப்பட்டியில் 20 நாட்களாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மேல்கரைப்பட்டி கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. குறிப்பாக இரவுநேரம் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக 24 மணிநேரமும் மின்விநியோகமின்றி சில தெருக்கள் இருளில் சிக்கி தவித்தன. இதனால் அப்பகுதி மக்கள் மின்சாதன பொருட்களை உபயோகிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். விரைவில் மின்விநியோகம் சீர் செய்யப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, ‘‘டிரான்பார்மர் பழுதின் காரணமாக மேல்கரைப்பட்டி மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பழுது நீக்கப்பட்டு மின்விநியோகம் சீர்செய்யப்பட்டு விடும்’’ என்றார்.

Tags :
× RELATED கால்பந்து போட்டி