மரக்காணம் பகுதியில் நடவு பணி துவக்கம்

மரக்காணம், அக். 23: மரக்காணம் பகுதியில் நாரவாக்கம், கோணவாயன்குப்பம், அனுமந்தை, கீழ்பேட்டை, கந்தாடு, நடுக்குப்பம், வண்டிப்பாளையம், புதுப்பாக்கம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் கிணறு, ஏரி, குளம் உள்ளிட்டவைகளில் இருக்கும் தண்ணீரை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர். ஆனால் இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் இருந்த அனைத்து நீர் நிலைகளும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே வறண்டுவிட்டது. இதன் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யாமல் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இங்கு பரவலாக விட்டு, விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கிணறுகளிலும் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நீரை நம்பி இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெல் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்தல், களை எடுத்தல், விதை விதைத்தல் போன்ற நடவு பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : area ,Marakkanam ,
× RELATED குடியிருப்பு பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு