×

தீர்த்தக்கட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு

வி.கே.புரம், அக். 18:  தாமிரபரணி மகா புஷ்கர விழா, கடந்த 11ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 7வது நாளான நேற்று அதிகாலை முதலே பாபநாசத்தில் பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர். ஆற்றில் நீராடியவர்கள் விட்டுச்சென்ற பழைய துணிமணிகள், நகராட்சி சார்பில் எடுத்துச் செல்லப்பட்டன. நகராட்சி சார்பில் ஆணையாளர் பொன்னம்பலம் தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பாபநாசத்தில் அகில இந்திய துறவியர்கள் சங்கம் சார்பில் கைவல்ய சிறப்பு மாநாடு, மாலையில் இந்திர தல தீர்த்த படித்துறையில் தீப ஆர்த்தி நடந்தது. பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் சார்பில் காலையில் ராஜேனீஸ்வரன்சுவாமி தலையில் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் 16 கருவிகளுடன் தமிழ் ஆகம விதிப்படி நடந்த தீப ஆரத்தியை இந்து முன்னணி மாநில செயலாளர் அரசுராஜா தொடங்கி வைத்தார்.
அம்பை காசிநாதர் கோயில் தீர்த்தவாரி படித்துறை, கல்லிடைக்குறிச்சி பிருகு தீர்த்தக்கட்டத்தில், மகா புஷ்கர விழா 7வது நாளை முன்னிட்டு ஏராளமானோர் நீராடினர். தாமிரபரணீஸ்வரர் ஆலய நதிக்கரையில் மாலையில் ஆரத்தி நடந்தது. கல்லிடைக்குறிச்சி கண்வ தீர்த்தத்தில் சங்கல்ப ஸ்நானம், தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் வேலாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டு ஆரத்தி பூஜை நடத்தினார். ஆலடியூர் அருகே காசிநாதர் படித்துறையில் கோ பூஜை நடந்தது. பெண்கள் நீராடி அருகிலுள்ள முப்புடாதியம்மனுக்கு அபிஷேக பூஜைக்காக புனித நீர் எடுத்து சென்றனர்.
கல்லிடைக்குறிச்சி தொந்தி விளாகம் தெருவில் காஞ்சி காமகோடி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அனைத்து நதிக்கரையிலும் காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : corridors ,
× RELATED விஐபி வழித்தடங்களில் குண்டுவெடிக்க...