×

தீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு

செய்துங்கநல்லூர்,அக்.18: தாமிரபரணி மகா புஷ்கர திருவிழாவை யொட்டி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீர்த்தகட்டங்களில் நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். முறப்பநாடு குரு தீர்த்தக்கட்டத்தில் நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி காலையில் சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நதி ஆராத்தி வழிபாடு நடந்தது.  முறப்பநாடு அருகே ஆழிகுடியிலும் சிறப்பு யாகம் நடந்தது. இங்கு சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டு ஆராதனை நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டனர். பின்னர் தாமிரபரணிக்கு  தீபஆராதனை காட்டப்பட்டது.   அகரம் தசவதார தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிஷேகமும் செய்யப்பட்டு 6.45 மணியளவில் மங்கள ஆரத்தி தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கருங்குளத்தில் மகாபுஷ்கர தினவிழாவை முன்னிட்டு காலையில் யாக சாலை நடந்தது. மாலையில் தாமிரபரணி நதிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

   ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் படித்துறை அருகிலுள்ள ஞானதீர்த்த கட்டத்தில் தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நேற்று 6 வது நாளாக தாமிரபரணி மகா புஷ்பக விழா கமிட்டி சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அபிஷேகம் மற்றும் மலர் தூவி சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தாரும், தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டி தலைவருமான கருத்தப்பாண்டிய நாடார் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்ததில் புனித நீராடினர். இதேபோல் சிறுத்தொண்டநல்லூர் ஊர்மக்கள் சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்று தீர்த்தக்கரை சுந்தரவிநாயகர் கோயில் அருகில் ஏற்பாடு செய்திருந்த ஞானதீர்த்த கட்டத்தில் நேற்று 6வது நாளாக கோ பூஜை நடத்தப்பட்டது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞான தீர்த்தத்தில் புனித நீராடினர்.

Tags : conclave ,
× RELATED தைப்பூச தேரோட்டம் முடிவடைந்தும்...