×

அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

பள்ளிப்பட்டு, அக். 17: ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் வேதாத்திரி மகரிஷி மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழா, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதையொட்டி அப்துல்கலாம் கல்வித்துறைக்கு ஆற்றிய சாதனைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது. அதன்பிறகு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ஆர்.கே.பேட்டை, சோளிங்கர் பகுதிகளில் நடைபெற்றது. இந்த பேரணியை ஆர்.கே.பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் மஹாராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதாபானு சாலைப்பாதுகாப்பின் அவசியம் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்கினார். இதேபோல் திருத்தணி வனச்சரக அதிகாரி பார்த்திபன் மரக்கன்று நடும் அவசியத்தை பற்றியும், மரத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Abdulkalam ,Birthday Celebration ,
× RELATED முதல்வர் பிறந்தநாள் விழா கால்பந்து...