×

ஆலங்குளம் டிஎஸ்பி மிரட்டுவதாக புகார் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார், பொதுமக்கள் வாக்குவாதம்

நெல்லை, அக். 16: ஆலங்குளம் டிஎஸ்பி மிரட்டுவதாக புகார் கொடுக்க வந்த ஊர் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வாக்குவாதம் நடந்தது.
ஆலங்குளம் அருகே வீராணம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி (47). ஊர் மக்களை திரட்டிக் கொண்டு இவர் ஆலங்குளம் டிஎஸ்பி மற்றும் வீ.கே.புதூர் சப் இன்ஸ்பெக்டர் சிவில் வழக்கு தொடர்பாக தங்களை மிரட்டுவதாக நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக விளம்பர பேனர்களை கையில் வைத்திருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். பின்பு நடந்த பேச்சுவார்த்தையில் 5 பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
பின்னர் ஊர் மக்களோடு சேர்ந்து கருப்பசாமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வீராணத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். தென்காசி பதிவு மாவட்டம், ஊத்துமலையில் எனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. யாருடைய இடைஞ்சலும் இன்றி எனது சொத்துக்களை ஆண்டனுபவித்து வருகிறேன்.
இந்நிலையில் ஆலங்குளம் டிஎஸ்பி அந்த சொத்துக்களில் தனக்கு பாத்தியம் உண்டு எனக்கோரி பிரச்னை செய்து வந்தார். இதன் காரணமாக தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பிரச்னைக்குரிய இடத்தில் நான் பயிர் செய்யாமல் இருந்தேன். இந்நிலையில் டிஎஸ்பியும், அவரது உறவினர்களும், வீகேபுதூர் சப் இன்ஸ்பெக்டர் உதவியோடு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். நான் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளேன். மேலும் எனது நிலத்தில் உள்ள மரங்களை ஜேசிபி மூலம் அகற்றி உழுது பயிர் வைக்க அவர் ஏற்பாடு செய்தார். இதை தட்டிக்கேட்ட எனது தாயார் முத்தம்மாளும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பியிடமும் மனு அளித்துள்ளேன். இதன் காரணமாக எனது குடும்பத்தினரையும், எனது உறவினர்களையும் அவர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே காரணம் என கலெக்டரிடம் இதை மரண வாக்குமூலமாக அளிக்கிறோம். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nellai Collector ,
× RELATED திருநங்கைகள் வசிக்கும் பகுதியில்...