×

ஆர்.கே.பேட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்: முறையாக இயக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு, அக்.16: ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜ் குப்பம் பொதுமக்கள் பஸ் சரிவர இயக்கப்படாததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரத்தில் இருந்து ஜனகராஜ் குப்பம், காலனி, கதனநகரம், எஸ்.கே.வி.கண்டிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பள்ளிப்பட்டுக்கு (தடம் எண்: 47) அரசு பஸ் தினந்தோறும் 4 முறை இயக்கப்பட்டது.  சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்து வந்தனர்.  தற்போது சோளிங்கர் போக்குவரத்து பணிமனையில் இருந்து இந்த பஸ் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மேற்கண்ட பஸ் தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனிடையே, திருத்தணியில் இருந்து பாலாபுரம் வரை இயக்கப்படும் கடைசி பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பணிக்கு செல்வோர், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
  இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள், கடந்த மாதம் 27ம் தேதி காலை பாலாபுரத்தில் இருந்து புறப்பட்ட (தடம் எண்: 47) பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். சோளிங்கர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ரமேஷ் செல்போனில் தொடர்பு கொண்டு, முறையாக பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஜனகராஜ் குப்பம், காலனி, கதனநகரம், எஸ்.கே.வி.கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணிக்கு ஜனகராஜ்குப்பத்தில் திரண்டனர்.  அரசு பஸ் வந்தபோது சிறைபிடித்து திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். முறையாக பஸ் இயக்கக்கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை எஸ்ஐ தியாகராஜன் தலைமையில் போலீசார் சென்று சோளிங்கர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் ரமேஷிடம் தொலைபேசியில் பேசினர். அப்போது அவர், “இதுதொடர்பாக விழுப்புரம் கோட்டத்துக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்துவிட்டோம். அரசு பஸ்சை ஒரு சிங்கிள் மட்டும் இயக்க எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பொதுமக்கள் சார்பில் மனு அளித்தால் விழுப்புரம் கோட்டத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : population ,RKPet ,
× RELATED சனாதன பேச்சு விவகாரத்தில்...