×

இயற்கை உரம் விற்பனை ஜோர் ஆண்டிபட்டி எருவிற்கு கேரளாவில் கிராக்கி

ஆண்டிபட்டி, அக்.12: ஆண்டிபட்டி பகுதி கால்நடை எருவிற்கு கேரளாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை உரத்திற்காக ஆண்டிபட்டியில் இருந்து லாரிகளில் கேரளாவிற்கு கால்நடை எரு அனுப்பப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி நகரைச் சுற்றியுள்ள கன்னியப்பிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, ஜி.கல்லுபட்டி, சித்தார்பட்டி, மேலபட்டி, மரிக்குண்டு, வேலாயுதபுரம், ஆசாரிபட்டி, ஏத்தக்கோயில், பாலக்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளாடு,
செம்மறியாடு, தொழுமாடு, கறவை மாடுகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக இப்பகுதியில் போதியமழை பெய்யாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது. மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் தரிசானது மட்டுமின்றி விவசாயமும் பொய்த்துப் போனது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள், குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளானார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் மேய்ச்சல் நிலங்கள் பசுமையடைந்தது.

இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தரிசாக உள்ள நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை விவசாயிகள் ஈரம் உள்ள போதே உழுது கால்நடை எருக்களை பரப்பி வருகின்றனர். இதனால் விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்களை தேடிச் சென்று எருவை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவது மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவில் லாரிகள் மூலமாக கால்நடை எருவை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில்,`` கடந்த பல ஆண்டுகளாக விவசாய நிலங்களில் கால்நடை எருவுகளையே அதிகமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற்று வருகின்றோம். இந்த எருவை ஆண்டுக்கு ஒரு முறை நிலத்தில் பயன்படுத்தி வருவதன் மூலம் மண் வளம் பெறுகிறது. வெள்ளாடு, செம்மறி ஆடுகளின் எருவிற்கு கேரளாவில் கிராக்கியாக உள்ளது. இதனால் எருவிற்காக நாங்கள் பல நாட்கள் காத்திருந்து வாங்கிச் செல்கிறோம் “ கூறினார்.

Tags : Jore Antipatti ,Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...