×

மழைக்கு நனைந்து வீணான உப்பளம் அரசுக்கு நாள்தோறும் ரூ.70 லட்சம் இழப்பு

சாயல்குடி, அக். 12:   சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. மாரியூர் மற்றும் வாலிநோக்கம் கடற்கரையிலிருந்து கடல்நீர் பாய்ச்சப்பட்டு, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாகும் உப்பை, இங்குள்ள அரசு தொழிற்சாலையில் நவீன முறையில் இயற்கையான அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமா இருந்ததால், அதிகளவில் உப்பு விளைச்சல் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாலிநோக்கம் பகுதியில் மழை பெய்தது. அதிகாரிகளின் மெத்தன போக்கால், மழைகால பாதுகாப்பு பொருட்கள்(தார்பாய், கிடுகு கீற்றுகள்) இருந்தும் அவற்றை கொண்டு உப்புகளை முறையாக மூடிவைக்காததால், உப்பளத்தில் விளைந்த உப்புகள், கரையில் சேமித்து வைக்கப்பட்ட உப்புகள் மழைக்கு நனைந்து கரைந்து ஓடின.
 
உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாத்தியில் பெருகிய மழை தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால், உப்பு பாதி விளைந்த நிலையில், மழை தண்ணீர் கலந்து வீணாகி வருகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு தேவையான உப்புகளின் இருப்பு குறைந்தால், தயாரிப்புக்கு தேவையான உப்புகள் இன்றி தொழிற்சாலை இயங்காமல், நிற்கும் அபாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன், அரசுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.70 லட்சம் வருவாய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Tags : waste wasteland government ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை