×

வேலம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் உடைப்பால் மணல் மூட்டை கொண்டு தடுப்பு

கிருஷ்ணகிரி, அக்.11: வேலம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி  அணை இடது புறக்கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து, கடந்த  2012ம் ஆண்டு புதிய கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் மூலம் சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி, சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. கால்வாயில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டும், எலி வலைகள்  அமைக்கப்படுவதாலும் அடிக்கடி கால்வாய் உடையும் நிலை உள்ளது. தற்போது வேலம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி அணை நீடிப்பு இடது  கால்வாய் பயன்பெறுவோர் சங்க நிர்வாகி சிவகுரு கூறும்போது, பாளேகுளி ஏரியில்  இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு  கால்வாய் அமைக்கப்பட்டது.

இதில், வேலம்பட்டி பகுதியில் 300 மீட்டர்  தூரத்திற்கு தொட்டி பாலம் உள்ளது. மண் கொட்டி அமைக்கப்பட்ட  கால்வாயும் உள்ளது. சிலர் எலி வலைகள் அமைக்க தோண்டும்போது மண் சரிவு ஏற்பட்டு  தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில்  கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் தண்ணீர் வீணானது.   இந்த இடத்தில்  இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல்,  கால்வாயில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்ணீர் மெதுவாக செல்கிறது.  எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 12 கி.மீ தூரம்  செல்லும் கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவரும், கால்வாயை தூர்வாரவும்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : canal break ,Lake Velampatti ,
× RELATED கீழ்பவானி பிரதான கால்வாயில் உடைப்பு : வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்