×

கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி கோயிலில் நவராத்திரி அகண்ட தீபம் ஒளியேற்றும் விழா: நீதிபதி கோமதிநாயகம் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில், அக். 11:  நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப் படுகிறது. இந்த வருட நவ ராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டு தினசரி காலை, மாலை சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை நடக்கிறது. நவராத்திரி முதல்நாளான நேற்று மாலை அகண்ட தீபம் ஒளியேற்றும் விழா நடந்தது. இதனை மாவட்ட குடும்ப நல நீதிபதி கோமதி நாயகம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி காமாட்சி விளக்குடன் கன்னி பெண்களும், அகல் விளக்குடன் சிறுவர்களும், மாவிளக்குடன் சிறுமிகளும், ஆரஞ்சு விளக்குடன் மூத்த சுமங்கலிகளும், ஓம்சக்தி விளக்குடன் இளம் சுமங்கலிகளும், ஆப்பிள் விளக்குடன் வயதான சுமங்கலிகளும் அகண்ட தீபத்தை வரவேற்றனர்.   அகண்ட தீபத்தை சக்தி பீட தலைவர் சின்னதம்பி ஒளியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நவக்கிர வழிபாடுகள் செய்த பின்னர் கருவறைக்குள் நவதானியம், பஞ்சலோகம் வைத்து அதன் நடுவே அகண்ட தீபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அகண்ட தீபம் ஏற்றி முடித்தவுடன் 18 ஏழை மகளிருக்கு ஆடைதானம் வழங்கப்பட்டது.  இதனை மாவட்ட குடும்ப நல நீதிபதி கோமதி நாயகம் வழங்கினார். பின்னர் நடந்த அன்னதானத்தை சக்திபீட துணைத்தலைவர் அருணாசலம் தொடங்கி வைத்தார். இந்த அகண்ட தீபம் தொடர்ந்து நவராத்திரி முடியும் வரை இரவும் பகலும் ஒளி வீசிக்கொண்டிருக்கும். இதற்காக காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5.45 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் நடை திறந்திருக்கும். பக்தர்கள் கருவறைக்குள் சென்று முக்கூட்டு எண்ணெய் விட்டு வழிபட கோயிலில் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  விழாவிற்கான  ஏற்பாடுகளை சக்தி பீடத்தலைவர் சின்னதம்பி தலைமையில் துணைத்தலைவர் அருணாசலம், பொருளாளர் அசோக்குமார், செயலாளர் சந்திரன், கருவறைப்பணி தலைவர்கள் சுப்பிரமணியன், நாகராஜன், செந்தில், பால்ராஜ், ராமகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி செல்வரெத்தினம் உள்பட தொண்டர்கள் செய்துள்ளனர்.

Tags : Deepa Lakshmi ,lighting ceremony ,Krishnankoil ,Adiparasakthi Temple ,
× RELATED பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு...