×

தேவாங்கர் கலைக்கல்லூரி ஊழலுக்கு ஆட்சியாளர்கள் துணை போவதா?

சென்னை, அக். 11:  தேவாங்கர் கலைக்கல்லூரி ஊழலுக்கு ஆட்சியாளர்கள் துணை போவதா? பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தேவாங்கர் கலைக்கல்லூரி செயலர் ராமசாமியின் ஊழலை தட்டிக் கேட்ட பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செப்.மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊழலில் திளைக்கும் கல்லூரி செயலாளருக்கு தமிழக ஆட்சியாளர்கள் துணை போவதும், அவருக்காக ஆசிரியர்களை மிரட்டுவதும் கண்டிக்கத்தக்கதாகும்.
அருப்புக்கோட்டை பகுதியில் தேவாங்கர் கலைக்கல்லூரி அரசு நிதியுதவியுடன் தன்னாட்சி நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மாணவிகளை தவறான செயல்களில் ஈடுபடுத்த துடித்த உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கல்லூரி செயலாளர் ராமசாமி, அவரது பதவிக்காலம் முடிவடைந்த பிறகும் கல்லூரியை கபளீகரம் செய்யத் துடிக்கிறார்.
அவருடைய பதவிக்காலம் 09.08.2018 அன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில், அவர் பதவியில் தொடருகிறாரா? அவரது நிர்வாகத்தின் கீழ் செயல்பட வேண்டுமா? என்று விளக்கம் கேட்டு கல்லூரி கல்வி இயக்குனருக்கும், இணை இயக்குனருக்கும் கல்லூரியின் முதல்வர் பாண்டியராஜன் கடிதம் எழுதி, 2 மாதங்களாகியும் இதுவரை பதில் இல்லை. தாம் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் 4 பேரை பணி நியமனம் செய்துள்ளார். அதற்கு முன்பாக ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் என 11 இடங்களை நிரப்பியுள்ளார். இப்பணியிடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. இதற்கான நியமனக் கடிதங்களில் முதல்வரை மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பலரிடம் அரசு உதவி பெறும் பிரிவில் பணி நியமனம் வழங்குவதாக தலா ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதேபோல் ஏராளமான முறைகேடுகளை செய்திருப்பதுடன், செப்.19ம் தேதி நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி செயலர் ராமசாமியின் அறை பூட்டப் பட்டது.ஆனால், அரசுத் தரப்பில் இதுதொடர்பாக பேச்சு நடத்த வந்த அனைவரும் செயலாளர் பதவியில் ராமசாமி நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கூறினார்கள். பணியாளர்களின் மற்ற கோரிக்கைகள் குறித்து அவர்கள் கேட்கவில்லை. ஆனால், செயலாளராக ராமசாமி நீடிக்க ஆசிரியர்கள் ஒப்புக் கொள்ளாததால், அவர்களைப் பழிவாங்கும் நோக்குடன் அரசு உதவி பெறும் பிரிவில் 50 ஆசிரியர்கள், 20 ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் சுயநிதிப் பிரிவு ஊழியர்களுக்கு கடந்த மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா தேவியைக் காப்பாற்றி அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் துடித்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் தேவாங்கர் கல்லூரியை அடகு வைக்க ஆட்சியாளர்கள் துணைபோவதை ஏற்க முடியாது. கல்லூரி நிர்வாகம் யாருக்கு என்பதில் உள்ள சிக்கல்கள் களையப்படும் வரை கல்லூரி நிர்வாகத்தை தற்காலிகமாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தேவாங்கர் சமுதாய பிரதிநிதிகள் கோரியிருப்பதால் அதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு உடனடியாக செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
அன்புமணி குற்றச்சாட்டு

Tags : rulers ,
× RELATED கனமழை காரணமாக தமிழ்நாட்டில் 6...