குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் சமுதாய கொடியுடன் பக்தர்கள் அணிவகுப்பு நடவடிக்கை எடுக்காத போலீசார்

உடன்குடி, அக்.11: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சமுதாய கொடிகளுடன் வரக்கூடாது என காவல்துறையினர் உத்திரவிட்டிருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர்  சமுதாய கொடிகளுடன் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என காவல்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் பல கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூறினர். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தசரா குழுக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஜாதி தலைவர் படங்களை அச்சிட்ட பனியன், டீசர்ட் அணிந்து வரக்கூடாது. சமுதாய கொடிகளை ஏந்தி வர தடை விதிக்க வேண்டும் என கூறினர். இதனையடுத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் டிஎஸ்பி திபு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பலர் கூட்டமாக கைகளை கோர்த்து கொண்டு சென்றனர். மேலும் சிலர் தங்களது சமுதாய கொடிகளை ஏந்தியவாறு கோஷங்கள் இட்டவாறு சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற ஏராளமான போலீசாரும், கோயில் நிர்வாகத்தினரும் கண்டும் காணாமல் இருந்தனர். பலதரப்பட்ட மக்களும் கூடும் இந்த தசரா திருவிழாவில் அதிகாரிகள் கூட்டத்தில் மட்டுமே சமுதாய தலைவர்கள் படம் வைத்து வரக்கூடாது, கொடி ஏந்தி வர கூடாது என பேசி விட்டு அதன் பின் கண்டு கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் இருசமுதாய இளைஞர்கள் மோதி மண்டை உடைப்பு சம்பவம் நடந்தது. தொடர்ந்து இருதரப்பினரும் சமரசமாக செல்வதாக கூறியதன் பேரில் போலீசார் சமரசம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது. எனவே இனிமேலாவது காவல்துறையினர் விழித்து ஜாதி கொடிகளை ஏந்திவார தடை செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pilgrims ,festival ,Dussehra ,
× RELATED தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் நாளை இணையதள சேவை துவக்க விழா