×

அரசு சார்பில் இயக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஓடிய வால்வோ பஸ் உடைப்பு

காஞ்சிபுரம், அக்.11:  நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட வால்வோ பஸ்கள் அனைத்தும் திடீரென்று காலாவதியாக்கப்பட்டு தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உடைக்கப்படுகின்றனர். காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள வால்வோ பஸ்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது இந்த மண்டலத்தில் ஒரு வால்வோ பஸ்களும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்ட 21 சாதாரண பஸ்களும் கடந்த 2 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2004 - 2009ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நகர்புற வளர்ச்சி திட்டத்துக்காக ₹32 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் சென்னை, பெங்களூர் உள்பட இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களை இணைக்கும் வகையில் வால்வோ பஸ்கள் வாங்க ₹6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ₹200 கோடி வழங்கப்பட்டது. இந்த நிதியில் அப்போதைய தமிழக அரசு சார்பில் 84 வால்வோ பஸ்கள் வாங்கப்பட்டன. இதில் 10 வால்வோ பஸ்கள் காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த பஸ்கள் சென்னை - புதுச்சேரி, சென்னை - வேலூர்,சென்னை - பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும் திடீரென காலாவதியாக்கப்பட்டு தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மண்டலம் மூலம் இயக்கப்பட்ட பஸ்கள், வெளி மண்டலங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட வால்வோ பஸ்கள் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அரசு போக்குவரத்து பணிமனை முன் உடைக்கப்படுகின்றன. 10 ஆண்டுகள் மட்டுமே சாலையில் ஓடிய இந்த வால்வோ பஸ்கள் ஏலம் விடப்பட்டு உடைக்கப்படுகிறது. இந்த பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று மறு பயன்பாட்டிற்கு உண்டான தரச் சான்றிதழைப் பெற்றால் மீண்டும் பேருந்து அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பஸ்களை தனித்தனியே பிரித்து, அதில் உள்ள உதிரி பாகங்களை எடுத்து அதை தனியார் பஸ்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஓரிக்கை பணிமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையாக விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

Tags : Volvo ,government ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...