×

மதுராந்தகம் நகரில் திடக்கழிவு மேலாண்மை பெயரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மதுராந்தகம், அக்.11: மதுராந்தகம் நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குப்பை கிடங்கிற்கு தடை விதிக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது செங்குந்தர்பேட்டை மற்றும் தேவ மன்னார் அவென்யூ, பொன்னியம்மன் கோயில் தெரு, மிஷின் தெரு. இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதிலிருந்து இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் நகராட்சி சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இந்த குப்பை கிடங்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு நடுவே, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், குப்பை கிடங்கு வரப்போவது பற்றி தெரியாத மக்கள் அப்போது அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்நிலையில், சமீபத்தில் தான் அங்கு குப்பை கிடங்கு அமையவுள்ளதாக குடியிருப்புவாசிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கு அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் கருத்து கேட்கவில்லை. 3 மாதங்களுக்கு முன்பே குப்பை கிடங்கு அமைக்கு திட்டம் தெரிந்திருந்தால் அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருப்போம். குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் குப்பை கிடங்கு வந்தால் அங்கு எப்படி மக்கள் வசிக்க முடியும். மேலும், குடிநீர் தேக்க தொட்டி அமைந்துள்ளதன் அருகிலேயே குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர்மாசு ஏற்படுவதோடு, அதனை பயன்படுத்தும் மக்களுக்கும் நோய் ஏற்படும் . எனவே இந்த திட்டத்திற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்க மாட்டோம். பணிகளை உடனே நிறுத்திவிட்டு குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மற்றம் செய்ய வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

Tags : city ,garbage warehouse ,area ,
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...