×

குமரி மாவட்டத்தில் ‘தர்பான்’ திட்டத்தில் 15 கிளை அஞ்சலகங்கள் கணினிமயம்

நாகர்கோவில், அக்.10: கன்னியாகுமரி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய அஞ்சல் வாரவிழா அக். 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இன்று (நேற்று) உலக அஞ்சல் தினமாகும். 10ம் தேதி கணக்குகள் தினமாகவும், 11ம் தேதி போஸ்டல் இன்சூரன்ஸ் தினமாகவும், 12ம் தேதி தபால்தலை சேகரிப்பு தினமாகவும், 13ம் தேதி வணிக தினமாகவும், 15ம் தேதி தபால்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தபால்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்க்ஸ்’ திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை 2,141 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 267 தபால்நிலையங்களிலும் செயல்படுத்தப்படும். ‘மை ஸ்டாம்ப்’ என்ற திட்டம் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தனிநபர் ஒருவர் ரூ300 கட்டணம் செலுத்தினால் அவர் படத்தை தபால் தலையாக பெற்றுக்கொள்ளமுடியும். கடந்த செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் நடந்த விழாவில், குமரி மாவட்டத்தை சிறப்பிக்கும் வகையில் மாத்தூர் தொட்டிப்பாலம் பற்றிய சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டுள்ளது.
‘தர்பான்’ திட்டத்தின் கீழ் அஞ்சலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. குமரியில் நாகர்கோவில், தக்கலை என 2 தலைமை அஞ்சலகங்கள், 78 துணை அஞ்சலகங்கள், 187 கிளை அஞ்சலகங்கள் உள்ளன. இவற்றில் ‘தர்பான்’ திட்டத்தின் கீழ் தற்போது கிளை அஞ்சலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. வெள்ளமடம் கிளை அஞ்சலகத்தில் இதன் தொடக்கவிழா இன்று (நேற்று) நடைபெற்றது. வெள்ளமடம் மற்றும் வாரியூர், இரவிபுதூர், குமாரபுரம், இருளப்பபுரம், அஞ்சுகிராமம், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால்,

குமாரகோவில், புத்தேரி, ஆஸ்ராமம், எறும்புக்காடு, மணக்கரை, வடக்கு சூரங்குடி, அழகம்பாறை ஆகிய 15 கிளை தபால் நிலையங்கள் தர்பான் திட்டத்தில் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் வழியாக இதுவரை 6347 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. தினசரி 50 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர்.  செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 52 ஆயிரத்து 387 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது ரூ.250 முதலீட்டிலும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் தபால் துறை ரூ.18 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : branch offices ,project ,Durban ,district ,Kumari ,
× RELATED இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு