×

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வெளியே ஹைடெக் தோற்றம்; உள்ளே கழிப்பறை நாற்றம் பராமரிப்பு இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகர், அக். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காததால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், பயோமெட்ரிக் கதவுகளை பொருத்தி, கைரேகை வைத்தால்தான் உள்ளே செல்லமுடியும் என்ற அளவிற்கு ஹைடெக்காக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அலுவலர்களும், பொதுமக்களும் முகஞ்சுளிக்கின்றனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மெயின் பில்டிங் வளாகம், கருவூலத்துறை வளாகம் பொது சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வளாகம் என மூன்று வளாகங்கள் உள்ளன. இந்த மூன்று வளாகங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தினசரி அலுவல் காரணமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள்  வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தை பொறுத்தவரை,

கலெக்டர் மற்றும் முதல்நிலை அதிகாரிகளுக்கு, அவர்கள் பணிபுரியும் அறையின் உட்பகுதியிலேயே கழிப்பறைகள் உள்ளன. ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளோ பராமரிப்பின்றி மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவதில்லை.

இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் அவலநிலையில் உள்ள கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தியும், சுகாதாரமற்ற கழிப்பறைகளை பராமரித்து, அவைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அலுவலகங்களில் குடிநீர் வசதி எற்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் அலுவலக மெயின் பில்டிங் வளாகத்தில் உள்ள கழிப்பறைகளில் கதவுகள் இல்லை. சிறுநீர் கழிப்பிடம் மிகவும் மோசமாக உள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் கல்வித்துறை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. மெயின் பில்டிங் வெளிப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான கழிப்பறை, சிறுநீர் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பயோமெட்ரிக் கதவுகள் பொருத்தி ஹைடெக்காக வைத்துள்ளனர். ஆனால், அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கழிப்பறைகளை கவனிப்பதில்லை. தற்போது கழிப்பறைகளில் கதவுகள், தண்ணீர், வாளிகள், குவளைகள் இல்லை. கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால், சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது’
என்றனர்.

Tags : Hi-Tech ,office ,Virudhunagar Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...