×

புலியூர் பள்ளியில் குடியரசு தின விளையாட்டு போட்டி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூர், அக். 10: குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகளை புலியூர் பள்ளியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கரூர் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் குடியரசு தினவிழா தடகள போட்டிகள் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேசியக்கொடியேற்றி வைத்து தடகள வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் குடியரசு தின விழா தடகள விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 100மீ, 200மீ, 400மீ, 800 மீ தனி மற்றும் தொடர் ஓட்டங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் 14, 17 19 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலும், அதில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலும் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்வர். மேலும் பள்ளியில் தேசிய பசுமைப்படையின் சார்பில் பிளாஸ்டிக் இல்லா பள்ளி வளாகம் என அறிவித்து மரக்கன்றுகளையும் அமைச்சர் நட்டு வைத்தார். இதில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, மாவட்ட கல்வி அலுவலர்(பொ) கனகராஜ், தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத்தலைவர் ராமசுப்பிரமணியன், தெற்கு ரயில்வே தடகள சர்வதேச வீரர் அண்ணாவி, பள்ளி தலைமையாசிரியர் ஜோதிமுருகன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், பொரணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Vijayabaskar ,Puliyur School ,
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு