×

காக்களூர் சிட்கோவில் அறிவிக்கப்படாத மின்தடை மின்வாரிய அலுவலகத்தை தொழிலதிபர்கள் முற்றுகை:

* 40 சத உற்பத்தி பாதிப்பு * தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ பகுதியில், தினமும்  பல மணி நேரம் அறிவிக்கப்படாத  மின்தடை உள்ளது. தொழிற்சாலைகளில் 40 சதவீத உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் ஆத்திரமுற்ற உற்பத்தியாளர்கள்  மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில், அம்பத்தூர், திருமழிசை, கும்மிடிப்பூண்டி, காக்களூர், ஆர்.கே.பேட்டை, விச்சூர், திருமுல்லைவாயல் ஆகிய இடங்களில், சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்கு, உணவுப் பொருள், ஜவுளி, தோல் பொருட்கள், மரச் சாதனங்கள், பேப்பர், ரசாயனம், பிளாஸ்டிக், பாலித்தீன் கவர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் 5,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

இதில், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை, 1989ம் ஆண்டு முதல் பிரிவும், 2008ல் இரண்டாவது பிரிவும் துவங்கப்பட்டது. 283 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 302 தொழிற்சாலைகள் உள்ளன.  தற்போது 142 தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஆண்டொன்றுக்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக, இங்கு மட்டும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார தடை காரணமாக இதுவரை மூன்று ஷிப்ட்கள் இயங்கிய தொழிற்சாலைகள், தற்போது ஒன்று அல்லது இரண்டு ஷிப்ட்கள் மட்டுமே இயங்குகின்றன.  இதன் காரணமாக  உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

காக்களூர் சிட்கோ பகுதியில் தினமும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால், பெற்ற ஆர்டரின்படி உற்பத்தி செய்து, நிறுவனங்களுக்கு வழங்க முடியாமல் ெதாழிலதிபர்கள் தவித்தனர். இதுகுறித்து பலமுறை  அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதில் ஆத்திரமடைந்த காக்களூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று 100க்கும் மேற்பட்ட ெதாழிலதிபர்கள் காக்களூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரிய அலுவலர் தினகரன் மற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்களிடம் , உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

அழிவை நோக்கி குறுந்தொழில்கள்
தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், பாஸ்கரன், சதீஷ்குமார் ஆகியோர் கூறுகையில், ‘’மின் தடையை காரணம் காட்டி, நாங்கள் பெற்ற ஆர்டர்களை காலதாமதமாக செய்து கொடுக்க முடியாது. மூன்று ஷிப்ட்களும் இயங்காததால், தொழிலாளர்களும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு ஓ.டி., கிடைப்பதில்லை. மின்வெட்டு தொடருமானால், சிறு மற்றும் குறுந்தொழில்கள் அழிவை நோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது. கைவசம் ஆர்டர் இருந்தும், நிர்ணயித்த உற்பத்தியை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தங்கள் உற்பத்தியில், 40 சதவீதம் வரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’’’’ என்றனர்.

Tags : Industrialists ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதரவு