×

திருப்போரூர் பேரூராட்சியில் அவலம் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார கேடு

திருப்போரூர். அக்.10: திருப்போரூர் பேரூராட்சியில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 70க்கும் மேற்பட்ட தெருக்கள், 5க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பேரூராட்சி எல்லைக்குள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை வாகனங்கள் மூலம் காலவாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு தரம் பிரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதை முறையாக செய்யாததால் பொதுமக்கள் மற்றும் தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் உரக்கிடங்கின் பின்புறம் மலைபோல் கொட்டி வைக்கப்படுகிறது.

இதனால், திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கின் பின்புறத்தில் குப்பைகள் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, இதில் மாடு, நாய் போன்றவை தங்களது உணவுப் பொருட்களை தேடி கிளறி விடுகின்றன. இதனால் இந்த குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள மயானத்தில் உள்ள கல்லறைகளிலும், மரங்களிலும் தொங்கியபடி காட்சியளிக்கின்றன. குப்பை அள்ளுதல், தரம் பிரித்தல் போன்ற பணிகளை தனியார் நிறுவனம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்தாலும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் இவற்றை கண்காணிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து கண்காணிக்காததால் குப்பைகள் மற்றும் கழிவுகள் உரக்கிடங்கிற்கு கொண்டு வரப்படாமல் வெளியே கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் சேகரிக்கும் அனைத்து குப்பைகள் மற்றும் கழிவுகளையும் உரக்கிடங்கின் உள்ளேயே கொட்டி தரம் பிரித்து பயன்படுத்த வேண்டும் என்றும், திறந்த வெளியில் கொட்டி விட்டு செல்லக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும்...