×

வத்தலக்குண்டு அருகே ஷட்டரை சரியாக மூடாததால் பாதி கண்மாய் தண்ணீர் காலி

வத்தலக்குண்டு, அக். 10: வத்தலக்குண்டு அருகே மதகின் ஷட்டரை சரியாக மூடாததால் கண்மாயில் தேங்கியிருந்த மழைநீர் பாதி வெளியேறி விட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வத்தலக்குண்டு அருகே மதுரை சாலை பூசாரிபட்டி பிரிவில் கண்மாய் உள்ளது. இதன்மூலம் வெங்கிடாஸ்திரிகோட்டை, கீழக்கோவில்பட்டி, குறும்பப்பட்டி உள்பட 25 ஊர்கள் குடிநீர் ஆதாரம் பெறுவதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுகிறது.இக்கண்மாயின் கரைகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர்த்தி வடக்கு, கிழக்கு புறங்களில் 2 மதகுகள் அமைக்கப்பட்டன. இதில் வடக்கு மதகு ஷட்டர் சரியாக மூடவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக கண்மாயில் நிரம்பி வந்த மழைநீர் பாதி வெளியேறி விட்டது. எனவே மதகின் ஷட்டரை சரியாக மூடி கண்மாயில் மழைநீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில், ‘‘மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் பரந்து விரிந்த கண்மாயின் பாதி தண்ணீர் வீணானதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த தண்ணீரை வைத்து 3 மாதம் சமாளித்து இருக்கலாம். இனியாவது பொதுப்பணித்துறை மெத்தனப்போக்கை கைவிட வேண்டும்’’ என்றார்.

Tags : Wattalakudu ,
× RELATED வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில்...