குலசேகரன்பட்டினம் கோயில் தசரா திருவிழா இன்று கொடியேற்றம்

உடன்குடி,  அக்.10: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (10ம்  தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா  திருவிழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி  நேற்று காலை 11 மணிக்கு காளிபூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை,  புஷ்பாஞ்சலி இடம் பெற்றது. இன்று (10ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு  அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலாவும், காலை 6 மணிக்கு  சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. பின்னர்  விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டுகின்றனர். இரவு 9  மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா  நடக்கிறது. திருவிழாவில் 10 நாட்களும் இரவு அம்மன் பல்வேறு வேடமணிந்து வீதியுலா வரும் வைபவம் நடக்கிறது. 10ம் திருவிழாவான வரும் 19ம் தேதி காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்கு  சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக  அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பு  எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது. 11ம் திருநாளில் அதிகாலை 1 மணிக்கு  சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக  ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு  சாந்தாபிஷேக ஆராதனையும் நடக்கிறது.
  ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலி சுமதா, இணை  ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.

Tags : Dussehra ,festival ,
× RELATED கருப்புச்சாமி கோவிலில் மாசித் திருவிழா