அடங்(க்)காத போக்சோவும்...ஓயாத குழந்தைகள் அழுகுரலும்...

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பாலியல் தொல்லை புகார் மட்டும் குறைந்தபாடில்லை. மாறாக தினமும் தலைநகரில் ஒரு போக்சோ சட்டம் பாய்கிறது. எவ்வளவு போக்சோ சட்டம் போட்டாலும், சற்றும் சளைக்காமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் காம கொடூரன்கள் தங்களது இச்சையை தீர்த்து கொள்கின்றனர். குறிப்பாக,  வீட்டின் வெளியில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்றுதான் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. சமீப காலமாக சென்னை மற்றும் புறநகரில் போக்சோ சட்டம் என்பது சாதாரண சட்டம் போன்று தினமும் பதியப்பட்டு வருகிறது. தலைநகரில் எங்காவது ஓர் இடத்தில் குழந்தை மற்றும் சிறுமிகளின் அழுகுரல் கேட்டு கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை சார்பில் இதுவரை ஆயிரக்கணக்கான போக்சோ சட்டம் பதியப்பட்டு இருந்தாலும், இதுவரை சொற்ப வழக்குகள் மட்டுமே முடிவு காணப்பட்டுள்ளது.

இதனால், காம கொடூரன்களின் பாலியல் தொந்தரவுகள் அதிகாரித்து உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில குழந்தைகள் நல ஆணையரகம் உள்ளது. இந்த அலுவலகம் சேத்துப்பட்டு அருகில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  ஆனால், அப்படி ஒரு ஆணையம் இருக்கிறதா என்று மக்களுக்கே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முன்வந்து விரைந்து தீர்வு காணப்படாததே. சமீபத்தில் அயனாவரம் சிறுமி வழக்கு தொடர்பாக, இந்த ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டபோதுதான், இப்படி ஒரு ஆணையம் இருக்கிறது என்று பொதுமக்கள் சிலருக்கு தெரியவந்தது. எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுத்து பாலியல் குற்றமில்லா தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெற்றோருக்கு கவனம் தேவை...

பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மற்றும் சிறுமிகள் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்தவர்கள்தான். போரூரில் எரித்து கொல்லப்பட்ட சிறுமியும் கூட வீட்டில் வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது, காம கொடூரன் தஷ்வந்த் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். சென்னை மற்றும் புறநகரில் உள்ள குடும்ப பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வபர்களாக தான் இருக்கிறார்கள். இதனால், அவர்களது குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பியும், உறவினர்களை நம்பியும் விட்டு செல்கின்றனர். அவர்கள் குழந்தைகள் வீட்டு வாசலில்தானே விளையாடுகிறது என நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். எனவே,  குழந்தைகள் மீது பெற்றோர் உரிய கவனம் செலுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related Stories:

>